இடுகைகள்

7  January 2015

அரசாணை வெளியிட்டும் ஊதியம் இல்லை! : அல்லல்படும் பகுதிநேர ஆசிரியர்கள்!

பகுதிநேர ஆசிரியர்களுக்கு, உரிய நேரத்தில் ஊதியம் கிடைக்க இ.சி.எஸ்., முறையை செயல்படுத்த, அரசாணை வெளியிட்டும், அதிகாரிகளின் மெத்தனத்தால், ஊதியம் கிடைக்காமல் அவதிப்படுவதாக, பகுதி நேர ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், 16 ஆயிரத்து 500 பேர் மாநிலம் முழுவதும் பகுதி நேர ஆசிரியர்களாக, 5000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். 2014 நவம்பரில், இவர்களின் தொகுப்பூதியம், 7000 ரூபாயாக உயர்த்தியும், ஊதியம் வழங்குவதில், இ.சி.எஸ்., முறையை செயல்படுத்தவும் அரசாணை வெளியிடப்பட்டது.

இதன் படி, சக அரசு அலுவலர்கள் போன்று, பகுதி நேர ஆசிரியர்களுக்கும், ஊதியம் ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்கு முன் கிடைக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இருப்பினும், கோவை மாவட்டத்தில், இ.சி.எஸ்., முறையை செயல்படுத்த அதிகாரிகள் மெத்தனம் காண்பித்து வருகின்றனர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், 900 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர்.

இவர்களுக்கு, டிசம்பர் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இ.சி.எஸ்., முறையில் ஊதியம் வழங்க, போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால், பகுதி நேர ஆசிரியர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசாணையில் அறிவித்த படி ஊதிய உயர்வுக்கான நிலுவை தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை. குறைந்த ஊதியத்தில், பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியத்தை இழுபறிக்கு பின் மாத இறுதியில் வழங்குவதால், மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

பகுதி நேர ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ராஜா கூறுகையில், ''இ.சி.எஸ்., முறையை செயல்படுத்த காலம் தாழ்த்தி வருகின்றனர். காசோலை வழங்குவதால், ஊதியத்தை பெறுவதற்கு, 20ம் தேதிக்கு மேல் ஆகிவிடுகின்றது. அரசாணை பிறப்பித்ததும். உரிய நேரத்தில் ஊதியம் கிடைக்கும் என, மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால், சிரமம் தொடர்ந்து வருகிறது,'' என்றார்.

22 December 2014

பகுதிநேர சிறப்பாசிரியர்களின் மாநில அளவினாலான பொதுக்குழுக் கூட்டம்

சேலத்தில் வரும்  27.12.2014 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் TAPSTA -ன் மாநில அளவினாலான பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.   

இடம் : ஸ்ரீ வாசவி சுபிக்க்ஷா மஹால் (வள்ளுவர் சிலை அருகில் ), பழைய பேருந்து நிலையம். 

 பொதுக்குழுக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கவும்.  

மேலும் தொடர்புக்கு : 9751554005, 9787173865, 9865368374.

 15 December 2014

பகுதி நேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கைகள்  
  1. அனைத்து பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்து முழுநேர ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும்.
  2. அனைத்து ஆசிரியர்களின் சம்பளப்பட்டியலுடன் இணைத்து, பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  3. கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள  மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும்.
  4. ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு மூலமாக, பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.
  5. பிற ஆசிரியர்களுக்கு வழங்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். 
  6. சிறப்பாசிரியர்கள் தகுதித் தேர்வு, வேலைவாய்ப்பக பதிவு மூப்பு என குழப்பி ஊழலுக்கு வழிவகை செய்யாமல், மூன்றாண்டுகளாக பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணிவரண்முறைச் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
  7. கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.
  8. பணியின்போது உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
  9. நிலுவையில் உள்ள ஏப்ரல் 2014 முதல் வழங்க வேண்டிய, ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.
 
- மாநில செய்தித்தொடர்பாளர் 

16  October 2014 

  பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ஆன்லைன் முறைக்கு மாற்றப்படுமா?

       தற்பொழுது பின்பற்றப்படும்,பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் வழங்கல் முறை, அனைவருக்கும் கல்வி இயக்க பணியாளர்கள் முதல் ஊதியம் பெறும் ஆசிரியர்கள் வரை பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் விதமாக உள்ளது  அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடிதம்  ( Rc.No.643 / A15 / PTI / 2013, dated: 04.09.2013 ) பல செயல்முறைச் சிக்கல்களுக்கிடையே 5 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க இயலா நிலையில், ஏட்டளவில் மட்டுமே உள்ளது 

  அதாவது , பள்ளித் தலைமையாசிரியர்கள், ஒவ்வொரு மாதமும் பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் பெற, ஒன்றிய வளமையத்திற்கு வருகைப்பதிவு நகல் மற்றும் வருகை புரிந்த விவரம் ஆகியனவற்றை அனுப்பி, பின்னர் மாவட்ட அனைவருக்கும் கல்வி அலுவலகத்தில் பரிசீலிக்கப்பட, பல ஆவணங்கள் மற்றும் கோப்புகள் ஓரிடத்தில்  இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்புவது சுமார் 5 நாட்களுக்கு மேலான கடினமான பணியாக உள்ளது. . 

 இப்பணியை எளிதாக்கும் பொருட்டு அனைத்து ஆசிரியர்களையும் போன்று சமமாக பகுதிநேர ஆசிரியர்களையும் பாவித்து, வரும் மாதத்திலிருந்து E-Payroll என்ற இணைய-சம்பள முறைக்கு உட்படுத்தி, நிதி கணக்கினை எளிதாக கையாள்வதுடன், பகுதிநேர ஆசிரியர்களும் எளிதில் அனைவரையும் போன்று மாத இறுதிப் பணி நாளில் ஊதியம் பெற்று மகிழச் செய்ய பணிவுடன் வேண்டுகிறோம்.

 14  October 2014

காலம் தாழ்த்தி வழங்கப்படும் சம்பளத்தால் பகுதிநேர ஆசிரியர்கள் அவதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு, மாதந்தோறும் காலம் தாழ்த்தி சம்பளம் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ், அரசு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் (ஓவியம், தையல், இசை, விளையாட்டு) கடந்த 2011 - 12ம் ஆண்டில், தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, மாதந்தோறும் 5,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.

675 பேர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 786 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு காரணங்களுக்காக 161 பேர் பணியிலிருந்து விலகி விட்டனர். தற்போது, மாவட்டம் முழுவதும் 625 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் 5,000 ரூபாய் போதுமானதாக இல்லை எனவும்; அதை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், தொகுப்பூதியமாக வழங்கப்படும் 5,000 ரூபாயை, மாதந்தோறும் உரிய காலத்தில் வழங்குவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. கடந்த பல மாதங்களாக தொடர்ந்து வரும் இந்த பிரச்னை, தற்போது வரை நீடித்து வருகிறது. மாதந்தோறும் 4ம் தேதி முதல் 8ம் தேதிக்குள் கிடைக்கும் சம்பளம், இந்த மாதம், இன்று காலை வரை கிடைக்கவில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  

சிரமம்: தொகுப்பூதியமாக கிடைக்கும் 5,000 ரூபாய், குடும்ப வருமானத்திற்கு முக்கிய பங்காக இருந்து வரும் நிலையில், அதை மாதந்தோறும் காலம் தாழ்த்தி வழங்குவதால், சிறப்பு ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால், மாவட்டத்தில் உள்ள சிறப்பு ஆசிரியர்கள் சம்பளம் கிடைக்காமல் புலம்பி வருகின்றனர். 

இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சீத்தாலட்சுமி கூறுகையில், "மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறப்பு ஆசிரியர்களுக்கும், சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. மாதந்தோறும் உரிய காலத்திற்குள் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது" என்றார் 

காஞ்சிபுரம்  மாவட்டத்தில் மட்டுமின்றிபல மாவட்டங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது என்று பகுதிநேர ஆசிரியர்கள்  புலம்பி வருகின்றனர். காலம் தாழ்த்தி கிடைக்கும் சம்பளத்தால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் பகுதிநேர ஆசிரியர்கள்.

 

13  October 2014

ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு போஸ்ட் கார்டு அனுப்பிய சிறப்பு ஆசிரியர்கள் - Dinakaran

திருச்சி : பெங்களூர் சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி தமிழக பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், குடியரசுத் தலைவருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. 

பெங்களூர் சிறையில் உள்ள ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி அதிமுகவினர் பல்வேறு போராட்டம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் குடியரசுத் தலைவருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் திருச்சியில் நேற்று நடத்தப்பட்டது. 

திருச்சி மண்டலத்தை சேர்ந்த 85 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் சார்பில் 85 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் தெப்பக்குளம் அஞ்சல் அலுவலகம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. சிலவற்றை தபால் பெட்டியில் செலுத்திவிட்டு, மற்ற அனைத்தையும் மூட்டையாக கட்டி அஞ்சல் அலுவலகத்தில் வழங்கினர். இதற்காக அவர்கள் தெப்பகுளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒன்று திரண்டனர் 

இப்போராட்டத்துக்கு மாநில அமைப்பாளர் சேசுராஜா தலைமை வகித்தார். மாநில சேர்மன் சோலைராஜா சிறப்புரையாற்றினார். தலைவர் பசுபதி, செயலாளர் ராஜா தேவ்கான், பொருளாளர் ஜான்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, மாவட்டத் தலைவர் சுரேஷ் வரவேற்றார் 

பணி நிரந்தரம் 

போராட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுக்கூட்டத்தில், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி நியமனம் செய்த நாளில் இருந்து பணிப் பதிவேடு உருவாக்க வேண்டும். பெண்களை திருமணம் செய்து செல்லும் ஊருக்கே இடமாறுதல் அளிக்க வேண்டும். ரூ.20 ஆயிரம் வீதம் தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

13  October 2014

விலைவாசி உயர்வில் சிக்கித்தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்

தமிழக அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்கள், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பணியமர்த்தப்பட்டு, கடந்த மூன்றாண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர். 

ஊதியம் மின்ணணு பட்டுவாடா முறையில், அனைவருக்கும் கல்வி இயக்க நிதியிலிருந்து தொகுப்பூதியமாக மாதா மாதம் தினக்கூலி முறையில் வழங்கப்பட்டு வருகிறது. மகப்பேறு விடுப்பு, தற்செயல் விடுப்பு ஆகியவற்றிற்கு ஊதியப் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.   

சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது, ஆளும் கட்சியினர், தொகுப்பூதியம் ரூ. 10,000 (பத்தாயிரம்) ஆக உயர்த்தப்படும். விரைவில் பணிநிரந்தரம் செய்யப்பட்டு பணிவரண்முறை செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். 

ஆனால், 2014 - 15 ஆம் கல்வி ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அறிக்கையில்,  ஊதியம் ஏழாயிரமாக மட்டுமே உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது 

இவ்வறிப்பு 1.4.2014 முதல் செயல்படுத்தப்பட்டு, ஏப்ரல், ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், செப்டம்பர் முதல் 7000 ஆகவும் வழங்ககப்பட விரைவில் ஆணை வெளியிடப்படும் என்று அதிகாரிகளால்  கூறப்பட்டது 

இந்நிலையில், இந்த செப்டம்பர் மாத ஊதியம் தாமதமாகிறது. இதுவரை ஆணை வெளியிடப்பட வில்லை. விடுமுறைக்கால ஊதியம், நிலுவைத்தொகை வழங்கல், உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கல், போனஸ் வழங்கல் போன்றவற்றிற்கான ஆணை வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையால், பண்டிகைக்காலத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். விலைவாசி உயர்வும் வெகுவாக பாதித்துள்ளது 

தமிழக அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்று ஓய்வூதியதாரர்கள் உட்பட மாநில அரசு ஊழியர்களுக்கும் 107% அகவிலைப்படியை வழங்கி, சுமார் 18 இலட்சம் ஊழியர்களை பயனடையச் செய்துள்ளது 

ஆனால் 15,169  பகுதிநேர சிறப்பாசிரியர்கள்  எவ்வித பணப்பயனுமின்றி, தாமதமாக, சொற்ப ஊதியத் தொகையாக ரூபாய் 5,000 மட்டுமே பெற்று விலைவாசி உயர்வையும் எதிர்கொள்ள இயலாமல் தவிக்கின்றனர். 

ஆகையால் பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை உடனடியாக  பன்னிரண்டாயிரமாக உயர்த்தி ஆணை பிறப்பித்து, விலைவாசிப்படிவழங்கி  பல ஆசிரியர் சங்கங்களின் நன்றியை பெற்றதுபோல், பகுதிநேர ஆசிரியர்களின் நன்றியைப் பெறுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

 

25 September 2014

பகுதிநேர ஆசிரியர்களுக்கு உயராத ஊதியம் !

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 100 சதவிகிதத்திலிருந்து 107 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் மாநில அரசு ஊழியர்களுக்கும் விரைவில் உயரவுள்ளதாக தெரிகிறது 

ஆனால் மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஊதியம் உயர்ந்தாலும், இவ்வியக்கத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வென்பது கானல் நீராகவே உள்ளது. அறிவிப்பு வந்த நிலையில் ஊதிய உயர்வாணை கிடைக்கப் பெறவில்லை. ஏப்ரல் 2014 முதல் ஆகஸ்டு 2014 வரை ஊதிய உயர்வு நிலுவைத்தொகை வழங்கப்படும் என எதிர்ப்பார்த்து ஏக்கத்தில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு, தீபாவளி பண்டிகை வேறு வருகிறது.  பண்டிகைகளுக்கு போனஸ் வழங்கப்படுவதில்லை. இந்நிலை பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 10 September 2014

கோவை சிறப்பாசிரியர்கள் - உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க விற்கு ஆதரவு

05 August 2014

25 August 2014

பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம்; அதிகரிக்க வலியுறுத்தல்?

        'தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியத்தை 10ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்' என அரசுக்கு, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

          தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓவியம், தையல், இசை, உடற்கல்வி என ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வாணையம் கடந்த, 2013, மே மாதம் 782 பணியிடங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான நேர்முகத் தேர்வுக்கு ஒரு பணியிடத்துக்கு 5 பேர் வீதம் 3110 பேர் அழைக்கப்பட்டனர். ஆனால், இப்பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. ஏற்னவே தேர்ந்தெடுக்கப்பட்ட 10ஆயிரத்து 548 ஆசிரியர் பணியிடங்களுக்கு தொகுப்பூதியமாக 5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இத்துடன் கூடுதலாக இரண்டாயிரம் ரூபாய் சேர்த்து 7 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 2012ம் ஆண்டு முதல் பணியாற்றும் இத்தகைய பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்; பணி நிரந்தரம் செய்து தர வேண்டும் இவ்வாறு, அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

20 August 2014

 

முழுநேர பணிக்கு வற்புறுத்தல்; பகுதிநேர ஆசிரியர்கள் புலம்பல்.

           திருப்பூரில் உள்ள சில பள்ளிகளில், முழுநேரம் பணியாற்ற வற்புறுத்துவதாக, பகுதி நேர ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளிகளில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை போக்கும் வகையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், தமிழகம் முழுவதும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
              
ஓவியம், இசை, தையற்கல்வி மற்றும் உடற்கல்வி சார்ந்த பாடங்களை, சிறப்பு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். வாரத்தில் மூன்று அரை நாட்கள் வீதம், மாதம் 12 நாட்கள்அவர்கள், கட்டாயம் பணியாற்ற வேண்டும். அவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில்,அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக 543 பேர் பணியாற்றுகின்றனர். சில பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. சில பள்ளிகளில் மருத்துவ காரணங்களுக்காக நீண்ட விடுப்பில், ஆசிரியர்கள் சென்றுவிடுவதால், மாதக்கணக்கில், அப்பணியிடம் காலியாக உள்ளது. பள்ளியில் கூடுதல் ஆசிரியர் இருக்கும்பட்சத்தில், அங்கு மாற்று ஆசிரியர்கள் பாடம் நடத்தி, "சிலபஸ்' முடிக்கின்றனர். போதிய ஆசிரியர் இல்லாத பட்சத்தில், பாடம் கற்பிப்பது தடைபடுகிறது.அவ்வாறான சில பள்ளிகளில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை, வகுப்பறையில் பாடம் நடத்துமாறு, தலைமை ஆசிரியர்கள் வற்புறுத்துகின்றனர். ஓரிரு ஆசிரியர்கள் ஆர்வமுடன் பாடம் நடத்த முன்வந்தாலும், பகுதிநேர ஆசிரியர்களில் பலரும், அதை விரும்புவதில்லை. விருப்பமில்லாத ஆசிரியர்களை, பாடம் நடத்துமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாக, புகார் எழுந்துள்ளது.உடற்கல்வி, தையல், ஓவியம், இசை போன்றவற்றில் மட்டுமே, பகுதிநேர ஆசிரியர்களுக்கு பயிற்சி உள்ளது; அவர்கள் வகுப்பறையில் தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம் சார்ந்த பாடங்களை நடத்துவதற்கு போதிய பயிற்சியோ, அனுபவமோ இல்லை. மாணவர்களுக்கு புரியும் விதமாக, அவர்களால் எளிதாக பாடம் கற்பிப்பதும் கடினம். பகுதிநேர பணிக்கு வரும் தங்களை, முழுநேர பணிசெய்ய வற்புறுத்துவதாக, சிறப்பு ஆசிரியர்கள் பலரும் புலம்புகின்றனர்.

 

பகுதிநேர ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்க உத்தரவு.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிப்புரியும் பகுதிநேரஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து, தகவல் அனுப்புமாறு, தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


கோவை மாவட்டத்தில், 1090 தொடக்க மற்றும்  நடுநிலை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இதில், அரசுப்பள்ளிகளில் மட்டும், இசை, ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட பாடங்களுக்கு, பகுதிநேர கலையாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு,

இம்மாத துவக்கத்தில், மாதந்தோறும் 2,000 ரூபாய் ஊதிய உயர்வுஅளிக்கப்படும் என தகவல் வந்தது.தொடர்ந்து, சம்பள தொகை அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, மாவட்டந்தோறும் அரசுப்பள்ளிகளில் பணிப்புரியும் பகுதிநேர கலையாசிரியர்களது தகவல்களை சேகரித்து அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பணிப்புரியும் பகுதிநேரகலையாசிரியர் குறித்த விபரங்களை அனுப்புமாறு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தின் சார்பில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க ஆர்ப்பாட்டம் - சேலம்

 
முதலமைச்சர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் அவதூறு கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகுதிநேர ஆசிரியர்கள் நேற்று ( 08.08.2014 ) போராட்டங்கள் நடத்தினர். சேலம் மாவட்ட சங்கத்தின் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டக் காட்சிகள்
 
 

தமிழக பகுதி நேர சிறப்பு ஆசிரியர் சங்கம் . கோவை மாவட்டம்.

 
ஊதிய உயர்வு அளித்த மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மற்றும் 3வது பொதுக்குழு கூட்டம். குனியமுத்தூரில் நடைபெற்றது. இதில் எராளமான ஆசிரியர்-ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

இன்றைய கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கபட்டது. புதிய நிர்வாகிகள் மாவட்ட தலைவர் திரு. ஆனந்த் குமார், துணை தலைவராக திரு தியாகு.செயலாளர்.திரு.ஸ்ரீனிவாசன். துணை செயலாளர். திரு சுதாகர். பொருளாளர். திருமதி. எலிசபெத். ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் திரு. சிவநாராயணன். தமிழக பகுதி நேர சிறப்பு ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர்.திரு. D. ராஜா தேவகாந்த். மாநில துணை அமைப்பாளர். திரு ஆனந்தராஜ். மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

 பகுதிநேர சிறப்பாசிரியர்களின் வேண்டுகோள்

அனைவருக்கும் கல்வித்திட்டதின் கீழ் அரசாணை 177 நாள் 11.11.2011 ன் படி தமிழகம் முழுவதும் 16549 ஆசிரியர்கள் அரசு நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். இப்பணியிடங்களில் 5253 கலையாசிரியர்களும், 5392 உடற்கல்வி ஆசிரியர்களும், தொழிற்கல்வி ஆசிரியர்கள் (கணினி உட்பட) 5904 ஆசிரியர்களும் ஆறாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர் இவர்களில் 15169 ஆசிரியர்கள் பணியாற்றுவதாக அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது மீதி 1380 பணியிடங்கள் காலியானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டாண்டுகளில் 8.33% பணியிடங்கள் காலியேற்ப்பட்டதற்கு பணிச்சூழல் சரியில்லாதது முக்கிய காரணமாக இருக்கலாம் மேலும் இவ்வாசிரியர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் ரூபாய் 5000 போதுமானதாக இருக்கவில்லை. பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை ரூபாய் 7000 ஆக உயர்த்தி அறிவிப்பு வந்துள்ளது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது. ஆனால் உயர்த்தப்பட்ட ஊதியம் எப்பொழுது கிடைக்கும் என பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். கடந்த மூன்றாண்டுகளில் மே மாதம் ஊதியமும் வழங்கப்படவில்லை. ஊதிய உயர்வு நிலுவைத்தொகை, ஏப்ரல் 2014, ஜூன் 2014, ஜூலை 2014 மற்றும் ஆகஸ்டு 2014 மாதங்களுக்கு வழங்கப்பட ஆணை வழங்கப்படவில்லை. இதனிடையே தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய .மு.எண் 023981/ஜே3/2013 நாள் 12.8.2014 ல் பணியிட தேவை விவரம் கோரப்பட்டுள்ளது. பகுதி நேரம் போக, மீதி நேரத்தில் வேறு வேலைகள் கிடைப்பது அரிதாக உள்ள நிலையில், ஒரு ஆசிரியருக்கு இரு பள்ளிகள் வழங்கினால் சற்று பொருளாதாரச் சுமையை சமாளிக்க ஏதுவாகும். எனவே அரசாணை எண் 177 நாள் 11.11.2011 ல்utilization of the services of selected incumbents in schools as part time instructor’’ என்ற 3 ஆம் தலைப்பில் ‘’The Services of the selected part time instructors may be utilized for maximum nearby 4 schoolsஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சற்று பரிசீலனைச்செய்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு இரு பள்ளிகளாவது வழங்கி சற்று ஆறுதல் அளிக்க வேண்டுகிறோம்.

அரசுப் பள்ளிகளில் முழு நேர கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களா? 
 
      அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முழு நேர கணினி ஆசிரியர்கள் இல்லாததால்,  மணவர்களுக்கு கணினிக் கல்வியில் ஆர்வம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
  அனைத்து மாணவர்களும் கணினி கல்வியைப் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு கணினிக் கல்வியை மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு பாடமாகக் கொண்டுவந்தது. முதலில் தமிழக அரசின் எல்காட் மூலமாக தனியார் கணினி பயிற்சி நிறுவனங்களுடன் ஒப்பந்தம்செய்து, பள்ளிகளுக்கு கணினிப் பாட ஆசிரியர்கள், 10-க்கும் மேற்பட்ட கணினி மற்றும் அதற்கு தேவையான உபகரணங்கள் ஆகியவை 15 வருட ஒப்பந்த அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்பு, ஒப்பந்தம் முடிந்த தறுவாயில் 2008 ஆம் ஆண்டின்போது தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பணிபுரிந்த அனைவருக்கும் தகுதித் தேர்வு வைத்து, அதில் தேர்வானவர்களை அரசுச் சம்பளத்தில் பணியமர்த்தியது. அதனிடையே, ஒருசிலரை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வு செய்தது. ஆனால், அதன் பின்னர் முழுநேர ஆசிரியராக அரசின் மூலம் யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
 
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மட்டும்தான் கணினிப் பாடத்துக்கென்று நிரந்தரமான ஆசிரியர் உள்ளார். மற்ற பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழக நிதியின் மூலமும், சில பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் மூலமும் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
ஆனால், இதில் உள்ள பிரச்னை என்னவென்றால், அரசு வகுத்துள்ள விதியின்படி சிறப்பு ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு மூன்று நாள்கள் என 12 நாள்கள்தான் பணிக் காலமாகும்.
 
மேலும், அவர்கள் அரசின் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கணினிப் பாடம் கற்றுக் கொடுக்க நியமிக்கப்பட்டவர்கள். அவர்களால், அவர்களுக்கு இருக்கும் குறுகிய நேரத்தில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கான பாடத்தை முடிக்க முடியாமல் போகிறது. மீதி நாள்களில் மாணவர்களை வழிநடத்த சரியான அதே துறையைச் சார்ந்த ஆசிரியர்கள் இல்லை.
 
இதற்காக ஒருசில பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் மூலம் தாற்காலிகமாக ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் முழு நேரம் பணியில் உள்ளனர். ஆனால், இதில் மாணவர்களால் கொடுக்கப்படும் பணத்தின் மூலம்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் தரப்படுகிறது.
 
இதனால் மாணவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை ஏற்படுத்தப்படுகிறது, மேலும், மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் போதிய பணம் வசூலாவதில்லை.
 
இதனால் பகுதிநேர பாடமாகி விட்டது போன்ற தோற்றத்தை கணினித் துறை ஏற்படுத்துகிறது. எங்கும் கணினிமயமாகி விட்ட நிலையில் அரசுப் பள்ளிகளில் இப்படிப்பட்ட நிலை நீடிப்பது, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது.
 
மேலும், 2013 ஆம் வருடம் தகுதித் தேர்வின் மூலம் நீக்கப்பட்டவர்கள் 15 வருடம் காலம் பள்ளிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள். அவர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும் அல்லது மீண்டும் தேர்வு வைத்து முழு நேர கணினி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அரசு இந்த விஷயத்தில் ஓர் உறுதியான நிலைப்பாடை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.  
go to top